முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்
சாலையில் கழிவுநீர் வழிந்தோடியதை கண்டித்து முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
சாலையில் கழிவுநீர் வழிந்தோடியதை கண்டித்து முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
வாய்க்கால்களில் அடைப்பு
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் முத்தைய முதலியார் வீதி, விஸ்வநாதன் நகர், அங்காளம்மன் நகர், சோலை நகர், சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மழை காலத்தின்போது ஓரிரு நாட்களில் கழிவுநீர் வடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை கழிவுநீர் வாய்க்கால் தூர்வாராததால் மழை நின்ற பிறகும் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சாலைமறியல்
இது குறித்து அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை முத்தியால்பேட்டை சின்னமணிக்கூண்டு அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை விரைவில் சீரமைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story