வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,858 பேருக்கு பரிசோதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,858 பேருக்கு பரிசோதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 6 Dec 2021 9:56 PM GMT (Updated: 6 Dec 2021 9:56 PM GMT)

விமானம் மூலம் இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,858 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஆர்.ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

5,858 பேருக்கு பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 21 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 11 ஆபத்தான நாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகிறோம்.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்து கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 6 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை.

அவர்களுக்கு சாதாரண டெல்டா பாதிப்பு தான் இருக்கிறது. இதில் 4 பேர் கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியிலும், 2 பேர் நாகர்கோவில் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்னொருவருக்கு பரிசோதனையில் எந்த அறிகுறியும் தென்படாததால், அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஒமைக்ரான் வைரசுக்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு ஆஸ்பத்திரிகளில் 12 இடங்களில், கொரோனாவில் இருந்து உருமாருகிற வைரஸ்களை கண்டறிம் ‘டேக்பாத்’ ஆய்வகம் செயல்பட தொடங்கி இருக்கிறது. தமிழகத்துக்கு இதுவரை ஆபத்தான நாடுகளில் இருந்து 28 விமானங்கள் மூலம் வந்த 5 ஆயிரத்து 249 பேருக்கும், ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து 142 விமானங்களில் வந்த, தலா 2 சதவீதம் பேர் என்ற அடிப்படையில் 609 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 858 பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

100 சதவீதம் தடுப்பூசி

ரஷியா, துருக்கி உள்பட குறைவான தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட அதிகமான தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு என்பது குறைந்த அளவில்தான் உள்ளது.

ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story