ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரி வழக்குகளில் தீபா, தீபக்கை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்


ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரி வழக்குகளில் தீபா, தீபக்கை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:57 PM GMT (Updated: 6 Dec 2021 10:57 PM GMT)

ஜெயலலிதா செலுத்தவேண்டிய செல்வ வரி மற்றும் வருமானவரி நிலுவை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக இணைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1990-1991 நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை செல்வ வரி பாக்கியாக ரூ.10.12 கோடி செலுத்தவேண்டி நிலுவையில் உள்ளதாக வருமானவரித் துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதவிர வருமானவரி பாக்கியும் உள்ளது. இதற்காக ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஐதராபாத் இல்லம் உள்ளிட்ட 4 சொத்துகளை வருமானவரித் துறை ஏற்கனவே முடக்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் செல்வ வரி மற்றும் வருமானவரி தொடர்பான கணக்கு விவரங்களை ஜெயலலிதா ஆண்டுதோறும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என வருமானவரித் துறை கடந்த 1997-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தது.

விசாரணைக்கு உகந்தவையா?

அதை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் 18 மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு உகந்தவையா என்பது தொடர்பான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் முன்பு நேற்று நடந்தது. அப்போது வருமானவரித் துறை சார்பில் வக்கீல் கார்த்திக் ரங்கநாதன் ஆஜராகி, ஜெயலலிதா செலுத்தவேண்டிய செல்வ வரி மற்றும் வருமானவரி நிலுவை தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.

இணைக்க உத்தரவு

அதையடுத்து நீதிபதிகள், தற்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இந்த வழக்கில் அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக இணைக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Next Story