தமிழ் தெரியாதவர்கள் அதிக அளவில் பங்கேற்பு: இன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வை எதிர்த்து வழக்கு


தமிழ் தெரியாதவர்கள் அதிக அளவில் பங்கேற்பு: இன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 8 Dec 2021 2:25 AM IST (Updated: 8 Dec 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் தெரியாதவர்கள் அதிக அளவில் பங்கேற்பு: இன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சிவராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-18-ம் ஆண்டு நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த தேர்வை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

அதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வில், தமிழ் மொழிப்பாடம் படிக்காதவர்கள், பணி கிடைத்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என விதி வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 1-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியிடங்களில் 100 சதவீதம் தமிழர்களையே நியமிக்கும்வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள தேர்வில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story