தொழிற்பேட்டைகளின் நோக்கம் நிறைவேற சிட்கோ தொழில்மனைகள் விலை குறைப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தொழிற்பேட்டைகளின் நோக்கம் நிறைவேற சிட்கோ தொழில்மனைகள் விலை குறைப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 11:12 PM GMT (Updated: 7 Dec 2021 11:12 PM GMT)

தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீள வழிவகை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணிசமாக குறைப்பு

சிட்கோ தொழில்மனைகள் அதிக விலை காரணமாக பல வருடங்களாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளாக இருந்து வந்தன. இந்த அரசாணையால் தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு மிக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பல்வேறு தொழிற்பேட்டைகளில் மனை மதிப்பு தொழில்முனைவோர் எளிதில் வாங்கிடும் அளவில் குறைந்துள்ளது.

உதாரணமாக, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஒரு ஏக்கர் 1 கோடியே 19 லட்சத்து 79 ஆயிரமாக இருந்தது. இது, 75 சதவீதம் குறைக்கப்பட்டு ரூபாய் 30 லட்சத்து 81 ஆயிரத்து 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் 3 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயாக இருந்து மனையின் விலை 81 லட்சத்து 89 ஆயிரத்து 300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

கோவை-ஈரோடு தொழிற்பேட்டை

கோவை மாவட்டம் குறிச்சியில் ரூ.9 கோடியில் இருந்து ரூ.4.2 கோடியாகவும், செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூரில் ரூ.6 கோடியில் இருந்து ரூ.3.5 கோடியாகவும் மனை விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாகை, திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம், ஈரோடு தொழிற்பேட்டை ஆகியவற்றிலும் மனையின் விலை குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக விலை காரணமாக ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வரும் 400-க்கும் மேற்பட்ட காலி தொழில்மனைகளை கொண்ட காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 30 முதல் 54 சதவீதம் வரையிலும், விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 40 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் 19 தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு சுமார் 5 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

நோக்கம் நிறைவேற...

அதுமட்டுமல்லாமல், அம்பத்தூர், திருமழிசை உள்ளிட்ட 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017-ம் ஆண்டில் இருந்த மனை மதிப்பே நடப்பாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் குறைவான விலையில் மனை ஒதுக்கீடு பெற்று தொழில் தொடங்க முடியும் என்பதால் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story