ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட தஞ்சை, நெல்லை பஸ்நிலையம் - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட தஞ்சை, நெல்லை பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கிறார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நெல்லை புதிய பஸ்நிலையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. அக்டோபர் மாதம் முதல் பஸ் நிலையத்தை மூடி பணியை விரைவுபடுத்தினார்கள். ரூ.48 கோடியில் நடைபெற்ற இந்த பணியில் ஏற்கனவே இருந்த 4 நடைமேடைகளுடன் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதலாக 2 நடைமேடைகளும் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய பஸ் நிலையத்தின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். இதனுடன் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை பஸ்நிலையம் மற்றும் ரூ.6¾ கோடியில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள த.மு. ரோட்டில் 3 அடுக்கில் கட்டப்பட்ட இருசக்கர வாகன நிறுத்தம், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் சைக்கிளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி சாலை உள்பட ரூ.110 கோடி மதிப்பிலான திட்டங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திறப்பு விழாவை முன்னிட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வாழை மரம் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு கோலாகலமாக காட்சியளிக்கிறது. மின்விளக்குகள் ஜொலிக்கின்றன. புதிய பஸ் நிலையத்தில் மின் இணைப்பு வழங்கும் பணி மற்றும் சுகாதாரப்பணிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணி, தூய்மைப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை பழைய பஸ் நிலையம்:-
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, காமராஜர் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட், சிவகங்கை பூங்கா, அய்யன்குளம், சாமந்தான்குளம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 16 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் அய்யன்குளம், சாமந்தன்குளம் சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநகரின் மையப்பகுதியில் 13 ஆயிரத்து 469 சதுரமீட்டர் பரப்பளவில் இருந்த பழைய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 39 பஸ்கள் நிறுத்தப்படும் அளவுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அறை மற்றும் குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் பழைய பஸ் நிலையம் (அய்யாசாமி வாண்டையார் நினைவு பஸ் நிலையம்) உள்ளது.
அதேபோல் பழைய பஸ் நிலையத்திற்கு எதிரே திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ரூ.14 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்பு கேமரா, மின்தூக்கி வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தீயணைப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. பழைய நிலையம், மாநகராட்சி வணிக வளாகம் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ் நிலையத்தையும், வணிக வளாகத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை டி.வி. மூலம் பார்க்க தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி பழைய பஸ் நிலையமும், வணிக வளாகமும் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. வாழை மரங்கள் கட்டப்பட்டு, அலங்கார தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story