குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 Dec 2021 3:14 PM IST (Updated: 8 Dec 2021 3:14 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குன்னூர்,

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி இன்று விமானப்படைக்கு சொந்தமான மிக்-17வி5 ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட மொத்தம் 14 பேர் பயணித்தனர். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப்படை கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு, மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் பற்றிய தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை, விபத்தில் சிக்கியவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில், கோவை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 6 மூத்த மருத்துவர்கள் குன்னூர் விரைந்துள்ளனர். அதேவேளை, மாலை 4.30 மணியளவில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் குன்னூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story