ஹெலிகாப்டர் விபத்து: சதிவேலையா...? நவீன கருவிகளுடன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு
டெல்லியில் இருந்து வந்த தொழில் நுட்பகுழு, வெலிங்டன் ராணுவ மைய குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்து உள்ளது.
புதுடெல்லி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டின் முதல் (சிடிஎஸ்) முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து உள்ளார். ஒரு தலைசிறந்த ராணுவ வீரரின் திடீர் முடிவு தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த விபத்து குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. முப்படை சார்பாக நடைபெறும் விசாரணைக்கு ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போது அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் இந்த விபத்து குறித்து குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் (இயற்கைக்கு மாறான விபத்து ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகவே ராணுவ உயர் அதிகாரிகள் பயணிக்கும் போதும், அவர்கள் செல்லக்கூடிய விமானம், ஹெலிகாப்டர் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டதாக இருக்கும். விபத்தில் சிக்கிய இந்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி எல்லாம் விபத்துக்குள்ளானது கிடையாது.
அதி நவீன தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு ஏற்படுவது என்பது மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. மேலும் பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது தெரியவில்லை.
உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்புக்காக சில வேலைகளை கையில் எடுத்திருந்ததாகவும், அதனால் இது வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் ராணுவ அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே ஹெலிகாப்டரில் என்ன நடந்தது என தெரிய வேண்டும் என்றால் அதில் இருந்த கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே தெரியவரும். அதனால் அந்த கருப்பு பெட்டியை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களை கொண்டு விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் இன்று கமாண்டோ சிறப்புக் குழுவினர் 20 பேர் நவீன கருவிகளுடன் விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்தனர்.
அவர்கள் காட்டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் இருந்து நடைபாதை வழியாக நவீன கருவிகளை 2 பெரிய பெட்டிகளில் தூக்கிக் கொண்டு வந்தனர். மேலும் நவீன டிரோன் கேமராக்களும் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் முப்படை தலைமை தளபதி பலியான ஹெலிகாப்டர் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தபோது விபத்துக் ஏற்பட்டது, மரங்களின் மீது மோதுவதற்கு முன்பு எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது,
ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைய இன்னும் எவ்வளவு தூரம் இருந்தது போன்றவற்றை டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டு நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டது. இதற்காக விபத்து நடந்த பகுதி, தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதி, வனப்பகுதிகள் மேல் கேமரா பறந்தது. மரங்களின் உயரம் எவ்வளவு, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. நவீன கருவிகள் மூலம் ஆய்வு பணி நடந்ததால் அப்பகுதியில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. மேலும் நஞ்சப்பசத்திரத்தில் எத்தனை வீடுகள் உள்ளது, ஆண்கள் மற்றும் பெண்கள் எத்தனை பேர் வசிக்கின்றனர் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story