விதிகளை மீறிய 5 பஸ்களுக்கு நோட்டீசு


விதிகளை மீறிய 5 பஸ்களுக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 10 Dec 2021 12:07 AM IST (Updated: 10 Dec 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் போக்குவரத்து விதிகளை மீறிய 5 பஸ்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்

புதுவையில் போக்குவரத்து விதிகளை மீறிய 5 பஸ்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.
பஸ்களில் கூட்ட நெரிசல்
புதுச்சேரியில் கடந்த 6-ந் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன. அரசு சார்பில் இன்னும் மாணவர்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த வீடியோ வெளியானது.
இதனை தொடர்ந்து மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்றால் அந்த பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்தது.
5 பஸ்களுக்கு அபராதம்
இந்த நிலையில் லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர் ராவ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை நடத்தினர். 
அதில் 5 பஸ்களில் கூடுதல் பயணிகளை ஏற்றி வந்தது, ஆவணங்கள் இல்லாதது, பயண நேர அட்டவணையை சரியாக பின்பற்றாமல் இருப்பது தெரியவந்தது. உடனே போக்குவரத்து அதிகாரிகள் 5 தனியார் பஸ்களுக்கும் அபராதம் விதித்தனர். இதற்கான நோட்டீசை அந்த பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களிடம் வழங்கினர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தொடர்ந்து பஸ் படிக்கட்டு மற்றும் பின்பக்க ஏணியில் தொங்கிய படி வந்த மாணவர்களை பிடித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது போன்று தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதத்தை செலுத்தாத பஸ்களின் வழித்தட உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Next Story