தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் நாளை 50 ஆயிரம் இடங்களில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story