தைப்பொங்கல் முதல் தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம்


தைப்பொங்கல் முதல் தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 10 Dec 2021 12:01 PM IST (Updated: 10 Dec 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

வருகிற தைப்பொங்கல் (ஜனவரி 14) முதல் 3-வது வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் தாம்பரம் வரை மின்சார ரெயிலுக்காக தனிப்பாதை வசதி உள்ளது.

ஆனால் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் சில இடத்தில் விரைவு ரெயில் பாதை வழியாக இயக்கப்படும். இதனால் தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில்கள் இயக்குவதில் இடைவெளி அதிகமாக இருக்கும். இதனால் செங்கல்பட்டு வரை செல்ல வேண்டிய பயணிகள் ரெயிலுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டும்.

இதை தவிர்க்க தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரூ268 கோடி மதிப்பில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாம்பரம்-கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி- சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு என்று 3 பிரிவுகளாக பணிகள் முடிவுற்றுள்ளன.

இந்த வழித்தடத்தில் சிக்னல்கள் அமைப்பது, மின்இணைப்பு வழங்குதல், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய ரெயில் நிலையங்களில் விரிவாக்க பணிகள் நடந்தன. இந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

சமீபத்தில் இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் என்ஜின்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.தற்போது 3-வது வழித்தடத்தில் ரெயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற தைப்பொங்கல் (ஜனவரி 14) முதல் 3-வது வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர்

இதன் மூலம் பயணிகள் காத்திருப்பு நேரம் குறையும். செங்கல்பட்டு வரை மின்சார ரெயில் சேவையும் அடிக்கடி கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story