பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 10 Dec 2021 12:25 PM IST (Updated: 10 Dec 2021 12:25 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடியில் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை மாநகரத்தில் எஞ்சியுள்ள ஒரே ஒரு சதுப்பு நிலம் என்றால், அது பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம் தான். கடந்த 1960-ம் ஆண்டு 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தற்போது நகரமயமாதல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிற காரணங்களால் 700 ஹெக்டேர் பரப்பளவிற்கு சுருங்கியுள்ளது.

இந்நிலையில் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய் செலவில், 2 புள்ளி 58 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் தேவையான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, சதுப்பு நிலத்தில் பறவைகளை பாதுகாக்கும் வகையில், 42 வகையான உள்நாட்டு தாவர வகைகள் மற்றும் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பறவைகள் வந்து அமரக்கூடிய நீர்நிலைகளில் தேவையான வசதிகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் குப்பை மேடாக இருந்த பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story