மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்


மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 10 Dec 2021 12:52 PM IST (Updated: 10 Dec 2021 12:52 PM IST)
t-max-icont-min-icon

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டார். 

இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து,  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. 

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மற்றும் சொத்து சேர்ப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் வெங்கடாசலம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.  வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டதற்கு போலீசாரின் துன்புறுத்தலே காரணம். எனவே அவரது மரண வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வேளச்சேரி போலீசார் இதுவரை நடத்தப்பட்ட வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு வெங்கடாசலம் தற்கொலை வழக்கு விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

Next Story