கொரோனா பாதிப்பு; கலெக்டர்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தல்


கொரோனா பாதிப்பு; கலெக்டர்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2021 12:14 AM GMT (Updated: 11 Dec 2021 12:14 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடினால் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.




சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடினால் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனரை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மாநில செயல் திட்ட குழுவானது, நோய் தடுப்பு முறைகள் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.  அதன்படி, ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து, தமிழக துறைமுகங்களுக்கு வரும் பயணியரை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அவர்களில் எவருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.  மாநில எல்லைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் முதன்மையானது.

ஒமைக்ரான் பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்து வருவோரை, மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.  அனைத்து மாவட்டங்களிலும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற நோய் தடுப்பு விதிகளை, மக்கள் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

கொரோனா பாதிப்பு கூடினால், நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, 3வது அலை அச்சுறுத்தல் எழுந்தபோதே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story