கோவை பள்ளி மாணவர் மீது தாக்குதல் - ஓ.பி.எஸ் கண்டனம்


கோவை பள்ளி மாணவர் மீது தாக்குதல் - ஓ.பி.எஸ் கண்டனம்
x
தினத்தந்தி 11 Dec 2021 10:51 PM IST (Updated: 11 Dec 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவையில் 11-ம் வகுப்பு மாணவர் இறுக்கமாக சட்டை அணிந்து வந்ததால், ஆசிரியர் தாக்கிய விவகாரத்தில் ஆசிரியருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

‘ஒழுக்கம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தூய்மையாக நடந்துகொள்வது ஆகும். ஒழுக்கம் ஒருவனுக்கு மிகப் பெரிய சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நாட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

இருப்பினும், கடந்த ஆறு மாத காலமாக, அதிகாரிகளை மிரட்டுவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பெண்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடுவது, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது என ஒழுக்கக் கேடுகள் தான் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டம், கணபதி நகரைச் சேர்ந்த கலாதரன் என்பவரின் இரண்டாவது மகன் மிதுன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு உயிரியல் பாடப் பிரிவில் படித்து வருகிறார் என்றும், மிகச் சிறந்த கால்பந்து வீரரான இவர் கோவை மாவட்ட அணிக்குத் தேர்வாகி உள்ளதாகவும், மருத்துவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக நீட் தேர்விற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார் என்றும், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவனும் பள்ளிக்குச் சென்று வருவதாகவும், அந்த மாணவனுடைய சீருடை சட்டை தளர்வாக இருந்ததன் காரணமாக தளர்வாக இருந்த சட்டையைக் கொஞ்சம் இறுக்கமாக மாற்றி அந்தச் சட்டையுடன் பள்ளிக்குச் சென்றதாகவும், மாணவனின் சட்டை இறுக்கமாக இருந்ததைக் கண்ட இயற்பியல் ஆசிரியர் அந்த மாணவனை அழைத்து, சட்டை இறுக்கமாக இருப்பதற்கான காரணத்தைக் கேட்டதாகவும், அதற்கு அந்த மாணவன் விரிவாக விளக்கம் அளித்தும் விளக்கத்தில் திருப்தி அடையாத அந்த ஆசிரியர், மாணவனை அறைந்ததோடு சரமாரியாக தாக்கியதாகவும், இந்தத் தாக்குதல் பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்து கேட்கும் வரை சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்ததாகவும், இதன் காரணமாக அந்த மாணவனின் முதுகு, காது, கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன. 

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. 

சினம், பொறாமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல், கொடிய சொற்கள் ஆகிய நான்கை நீக்கி ஒழுகுதலே அறம் எனப்படுகிறது. இந்த அறச் செயலை மாணவ, மாணவியருக்குக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கத்தை மீறி, அறம் தவறிச் செயல்படுவது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகும். 

சட்டையை இறுக்கமாகப் போடுவது என்பது ஒரு சாதாரண செயல். இதற்கென்று தனி விதி ஏதுமில்லை. ஒருவேளை இறுக்கமாகப் போடுவது ஒழுங்கீனம் என்று கருதினால், அந்த ஆசிரியரே மாணவருக்கு அறிவுரை வழங்கி இருக்கலாம் அல்லது அந்தப் பள்ளி நிர்வாகத்திடமோ, முதல்வரிடமோ, தலைமை ஆசிரியரிடமோ தெரிவித்து இதுகுறித்து ஒரு பொதுவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கலாம். அவ்வாறு செய்யாமல், ஆசிரியரே ஒழுங்கீனமாகச் செயல்படுவது, மாணவரை சரமாரியாகத் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. 

இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒழுக்கத்தினால் அடைவது மேன்மை, ஒழுக்கமின்மையால் அடைவது எய்தாப் பழி என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இதுபோன்ற செயல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் பள்ளிகளில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து தக்க அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story