தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1208 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1208 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Dec 2021 12:24 AM IST (Updated: 12 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,208 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ398 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது

புதுச்சேரியில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,208 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.3.98 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல்தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான லலித் உத்தரவின் படி புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சோபனா தேவி தலைமை தாங்கினார். மாநில தலைமை நீதிபதி செல்வநாதன் கலந்துகொண்டு கோர்ட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தற்போது ஆண்டுக்கு 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதன் முக்கியமான குறிக்கோள் என்னவென்றால் இதில் வெற்றி, தோல்வி யாருக்குமில்லை. பொதுவாக நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு கூறும் போது ஒருவருக்கு வெற்றியும், மற்றொருவருக்கு தோல்வியும் ஏற்படும். ஆனால் இங்கு இருவருக்குமே வெற்றி தான். மேலும் நமது உறவுகள் மேம்பட இதுஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்காக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் முத்திரை கட்டணம் ஒட்டாமல் கூட உங்களுடைய பிரச்சினைகளை கூறி அதற்கு தீர்வு காண தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார்.
1,208 வழக்குகளுக்கு தீர்வு
நிகழ்ச்சியில் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயலரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ராபர்ட் கென்னடி ரமேஷ் மற்றும் நீதிபதிகள், வக்கீல் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். புதுவை நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணையத்தில் ஒரு அமர்வும், காரைக்காலில் 5 அமர்வுகளும், மாகியில் 2 அமர்வுகளும், ஏனாமில் ஒரு அமர்வும் என மொத்தம் 18 அமர்வுகள் நடந்தது.
இதில் சமாதானம் ஆகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன் மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல் மற்றும் சிவில் வழக்குகள் என நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமார் 3,642 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 1,208 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.3 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்து 936 இழப்பீடாக வழங்கப்பட்டது. 
குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்து பிரிந்து வாழ்ந்த 3 தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

Next Story