கீரனூர் கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி முறைகேடு: செயலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் பணியில் இருந்து நகை மதிப்பீட்டாளர் விடுவிப்பு
கீரனூர் கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி முறைகேடு தொடர்பாக வங்கி செயலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பணியில் இருந்து நகை மதிப்பீட்டாளர் விடுவிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
நகைக்கடனில் முறைகேடு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து உள்ளூர் மாவட்ட அதிகாரிகள் இல்லாமல் பக்கத்து மாவட்டமான தஞ்சாவூர் மண்டல ஆய்வுக்குழுவினர் மூலம் வங்கியில் நகைக்கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பட்டியல்படி நகை பொட்டலங்களின் மொத்த எண்ணிக்கை 934 எனவும், மொத்தம் ரூ.3 கோடியே 63 லட்சத்து 14 ஆயிரத்து 200 கடன் தொகை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வங்கியில் நகைப்பொட்டலங்கள் மொத்தம் 832 மட்டுமே இருந்துள்ளன. அதற்கு ரூ.2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 700 கடன் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நகையே இல்லாமல் ரூ.1 கோடியே 8 லட்சத்து 17 ஆயிரத்து 500 கடன் வழங்கியது தெரியவந்தது. இந்த தொகையை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே தங்களது உறவினர்கள் பெயரில் நகையை அடகு வைத்தது போலவும், அதற்கு கடன் வழங்கியது போலவும் கணக்கு காண்பித்துள்ளனர்.
பணியிடை நீக்கம்
இந்த முறைகேட்டில் வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல், தங்கநகை மதிப்பீட்டாளர் கனகவேலு ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து ஆய்வுக்குழுவினர் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார். மேலும் நகைமதிப்பீட்டாளர் கனகவேலு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் 3 பேர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறைகேடு பணம் வசூல்
இது தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி கூறுகையில், ‘‘முறைகேடு செய்யப்பட்ட பணம் முழுவதும் 3 பேரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு விட்டது. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதில் அரசு பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி தான் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து கடன் பெற்றவர்களின் பட்டியலை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஒருவர் நகைகளை அடகு வைத்து பல்வேறு கடன்களை பெற்றிருந்தால் ஒரு கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.’’ என்றார்.
Related Tags :
Next Story