தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு


தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு
x
தினத்தந்தி 13 Dec 2021 1:57 PM GMT (Updated: 13 Dec 2021 1:57 PM GMT)

நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் கடந்த 9-ம் தேதி குரங்கு ஒன்று தனது குட்டியுடன் சுற்றித்திரிந்துள்ளது. இதனை கண்ட தெருநாய்கள் குரங்கை துரத்திச் சென்றுள்ளது. ஒருகட்டத்தில் கும்பலாக சேர்ந்த நாய்கள் குரங்கை சரமாறியாக கடித்துள்ளன.

இதில், தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்த குரங்கு ஒரு கட்டத்தில் அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது ஏறி தப்பியது. இதனை அவ்வழியாக சென்ற கார் ஓட்டுநரான பிரபு என்பவர் பார்த்து, குரங்கை பத்திரமாக கீழே இறக்கிய போது சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது.

அதிர்ச்சியடைந்த பிரபு, குரங்கை தனது மடியில் போட்டவாறு மார்பு பகுதியில் அழுத்தினார். அப்போது, குரங்கிடம் அசைவு இல்லாததால், குரங்கின் வாயோடு வாய் வைத்து ஊதி மூச்சுக்காற்று கொடுத்து உயிரைக் காப்பாற்றினார்.

பின்னர், இருசக்கர வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்று பெரம்பலூர் கால்நடை மருத்துவமனையில் சேர்த்த பிரபு மருத்துவர்களிடன் நடந்ததை எடுத்துக்கூறினார். குரங்குக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குணமடைந்த பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

தெருநாய்கள் கடிதத்தில் நினைவிழந்த குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து பிரபு  அவர்கள் கைப்பற்றிய  வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

முதலுதவி செய்து குரங்கின் உயிரை காப்பாற்றிய பிரபு என்ற அந்த நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.தனது வாழ்த்து குறிப்பில் "பிரபு சார் யு ஆர் கிரேட்" என சிவகார்த்திகேயன் பதிவிட்டு உள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும்  அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபு காப்பாற்றிய அந்த குரங்கு இன்று உயிரிழந்தது. குரங்கு உயிரிழந்தது தனக்கு வேதனையாக உள்ளதாக பிரபு தெரிவித்துள்ளார்.

Next Story