தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்: ரூ.3,377 கோடி செலவு!
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3,978 கோடி நிதியில் ரூ.3,377 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
சென்னை,
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3,978 கோடி நிதியில் ரூ.3,377 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மாநிலங்களவையில் நேற்று, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட செயல்பாடு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.
அந்த பதிலில் எந்த எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது, அதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டு உள்ளது? என்ற விவரமும் இணைக்கப்பட்டு இருந்தது.
இதன்படி தமிழகத்தில் சென்னை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோவை, மதுரை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ரூ.3,978.62 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.3,376.96 கோடி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னைக்கு வழங்கப்பட்ட ரூ.497.62 கோடியில் ரூ.385.53 கோடி பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பதிலில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 கட்டங்களாக சுமார் 100 நகரங்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 லட்சத்து 84 ஆயிரத்து 998 கோடி ரூபாய் மதிப்பிலான 6452 திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 571 கோடி மதிப்பிலான 5809 திட்டங்கள் முடிக்கப்பட்டும், நடைபெற்றும் வருகின்றன.
இந்த பணிகளுக்காக கடந்த மாதம் 12-ந் தேதி நிலவரப்படி ரூ.27 ஆயிரத்து 359.60 கோடி விடுவிக்கப்பட்டது. இதில் ரூ.22 ஆயிரத்து 467.81 கோடி பயன்படுத்தப்பட்டு உள்ளது. திட்டத்தின் காலவரம்பு 2023-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.’
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story