தமிழகத்தில் தலைதூக்கும் பயங்கரவாதம் - அண்ணாமலை எச்சரிக்கை
தமிழகத்தில் பயங்கரவாதம் தலை தூக்க சாதகமான சூழல் உள்ளது: தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
சென்னை,
திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.
திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால் தான் தமிழகம் அமைதியாக இருக்கும். மாநிலத்தில் பயங்கரவாதம் தலை தூக்க எல்லா விதமான சூழ்நிலை இருக்கின்றது, எனவே தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்பு ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குதொடர்ச்சி மலை நக்சல்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. மார்த்தாண்டத்தில் சமீபத்தில் உதவி காவல் ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது அடிப்படைவாதிகளின் செயல்தான்.
உதவி ஆய்வாளர்களுக்கு போதிய அதிகாரத்தை அரசு கொடுக்கவில்லை. இதுவரை பார்த்திடாத வழக்குகளை இப்போது தமிழகம் சந்தித்து வருகிறது. ஒருபுறம் சாத்தான்குளம் போன்ற சம்பவங்களும், மறுபுறத்தில் காவல்துறையினருக்கு போதிய அதிகாரமின்மையும் உள்ளது.
கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக பா.ஜ.க.வினர் 23 பேர் மீது தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது. பா.ஜ.க.வின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக இந்த உள்ளாட்சி தேர்தலை நாங்கள் பார்க்கிறோம்.
அதேபோல ஜனவரி மாத இறுதியில் 11 மாவட்டங்களில் அலுவலக கட்டிடமும் மார்ச் மாதத்தில் 4 கட்டிடமும் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.
Related Tags :
Next Story