கொரோனா நிவாரணம்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
கொரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதுவரை 4.75 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் மாநில அரசி பேரிடர் நிதியிலிருந்து இந்த தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. எனினும், நிதி வழங்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 9ம் தேதி பதிலளித்த தமிழக அரசு, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து 36 ஆயிரத்து 220 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், கொரோனா தொற்று பாதித்து மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காலம் முதல் கொரோனா பெருந்தொற்று அல்ல (அல்லது) வேறு உத்தரவுகள் வரும் வரையிலான காலக்கட்டத்திற்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரண உதவியை வழங்கவும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி www.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து நிவாரண தொகையை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story