உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2021 9:05 PM GMT (Updated: 14 Dec 2021 9:05 PM GMT)

உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

40 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு ரூ.1,000-ம், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலுடன் கூடிய போராட்டத்தை முன்னெடுத்தனர். சென்னையை பொறுத்தவரையில், கொளத்தூர், திருவொற்றியூர், எழும்பூர், கிண்டி, தாம்பரம் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தாம்பரம் வட்டார போக்கு வரத்து அலுவலகம் அருகில் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி தலைமையிலும், எழும்பூர் தாலுகா அலுவலகம் அருகில் மாநில செயலாளர் வில்சன் தலைமையிலும் என ஒவ்வொரு இடங்களிலும் நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். சில இடங்களில் போராட்டம் நடத்தி மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் வில்சன் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தக்கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த பட்ஜெட் அறிவிப்பின்போது உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று அதுதொடர்பான அறிவிப்பு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம்.

வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது உதவித்தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். அதனை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த போராட்டம். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மாநிலக்குழு கூடி அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டத்தை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story