முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை


முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
x
தினத்தந்தி 15 Dec 2021 10:33 AM IST (Updated: 15 Dec 2021 12:37 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் பி.தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் தங்கமணி  மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தற்போதுவரை கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை என 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகாவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையில் மட்டும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில், காலை 6:45 மணி முதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு குவிந்த 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர், தி.மு.க. மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தங்கமணிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரரான, நாமக்கல்லில் இருக்கும் சத்தியமூர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.

ஈரோட்டில், பாரி வீதி , பண்ணை நகர், பண்ணை வீதி, கணபநி நகர், முனியப்பன் கோவில் வீதி உள்ளிட்ட 5 இடங்களில் 30 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் அருகே வேலாயுதம்பாளையம் பகுதியில், அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்றது வருகிறது.

இதேபோல, சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கமணியின் ஆதரவாளரான அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான செந்தில், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஈவிகேஎஸ் என்கிற சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சரின் உறவினர் சிவா ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மற்றொரு ஆதரவாளரான பள்ளிப்பாளையம் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி மற்றும் அவரது கணவரும் முன்னாள் பள்ளிப்பாளையம் ஒன்றிய சேர்மனுமான செந்திலின் பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் சோதனை நடைபெறும் தங்கமணி வீட்டு முன்பு குவிந்த அ.தி.மு.க. தொண்டர்கள்  பாதுகாப்புக்காக போடப்பட்ட தடுப்பு பேரிகார்டுகளை அகற்ற வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story