கோடம்பாக்கத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்த கர்ப்பிணி மாணவி
சென்னை கோடம்பாக்கத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்த கர்ப்பிணி மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூந்தமல்லி,
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா தொழிலாளி ஒருவரது 21 வயது மகள், கிண்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த மாணவி, திடீரென அங்கிருந்து கீழே விழுந்து விட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடிவந்து பார்த்தனர். அப்போது மாணவி, ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவருக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்து கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
உயிருக்கு போராடிய மாணவியை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவி, செங்கல்பட்டை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் சுற்றித்திரிந்ததால், மாணவி கர்ப்பம் ஆனார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவி, நேற்று முன்தினம் மாடியில் இருந்து விழுந்தபோது அதிர்ச்சியில் அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்து இருப்பது தெரியவந்தது.
எனவே கர்ப்பிணியாக இருந்த மாணவி, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தன்னை கர்ப்பமாக்கிய காதலன், ஏமாற்றி விட்டதால் விரக்தியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தது அவரது பெற்றோருக்கு தெரியுமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் காதலன் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story