வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே சோதனை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே சோதனை -  எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Dec 2021 3:27 PM IST (Updated: 15 Dec 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே சோதனை நடத்தபடுகிறது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

திமுக உட்கட்சி தேர்தல் சுமூகமாக நடைபெறும் நிலையில், சோதனை நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாமல் குறுக்கு வழியில் சோதனை நடைபெறுகிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.  திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே சோதனை. 

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை, நீட் தேர்வு ரத்து, முதியார் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உயர்வு என்பது போன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலைகுறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவேயில்லை. இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைத்தபோதிலும் திமுக அரசு குறைக்கவில்லை. 

பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக, சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது.

அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு மக்களை திசை திருப்பும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை அசைத்து விட முடியாது. இந்த வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம்.

அதிமுக வீழ்ந்து விடும் என நினைத்தார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் அதிமுக வளர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 இடங்களில் அதிமுக உள்கட்சித் தேர்தல் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது.

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் பணியை நிறுத்தி விட்டனர். இதனாலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

மேலும் சென்னை மாநகராட்சியில் ஒரே நேரத்தில் 160 பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்துவிட்டனர். அனுபவமில்லாத பொறியாளர்களால் தண்ணீர் எங்கு தேங்கும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது.

வரும் 17 ஆம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற சோதனை நடத்துகிறார்கள்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தலின்போதே கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார். கூட்டணியில் என்ன துரோகம் செய்தார்கள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். பாமக மற்ற தொகுதிகளில் ஜெயிக்க மக்கள் தான் வாக்களித்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story