ரூ.1 கோடி முறைகேட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை கீரனூரில் பரபரப்பு


ரூ.1 கோடி முறைகேட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட   கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை கீரனூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 11:12 PM IST (Updated: 15 Dec 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கீரனூரில் கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி முறைகேடு எதிெராலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீரனூர்:
ரூ.1 கோடி முறைகேடு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் ரூ.1 கோடியே 8 லட்சம் வரைக்கும் முறைகேடு நடந்தது அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல், நகை மதிப்பீட்டாளர் கனகவேலு ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. 
நகைகளை அடகு வைத்தது போலவும், அதற்கு கடன் வழங்கியது மாதிரி கணக்கு காண்பித்து பணத்தை மோசடி செய்துள்ளனர். அதிகாரிகள் விசாரணைக்கு பின் வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் கனகவேலு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் முறைகேடு செய்த பணத்தை 3 பேரிடம் இருந்து திருப்பி வசூலித்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் தெரிவிக்கப்படும் என கூறியிருந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
நகைக்கடன் வழங்கியதில் முறைகேட்டில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டனின் வீடு கீரனூரில் சிவன்கோவில் தெருவில் உள்ளது. இந்நிலையில், இவர் நேற்று காலை வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கழிவறைக்கு சென்றவர் நீண்டநேரமாகியும் வெளியே வராததால் மனைவி கார்த்திகா, கழிவறை கதவை திறந்து பார்த்தபோது நீலகண்டன் தற்கொலை செய்தது தெரியவந்தது. 
இதைப்பார்த்த அவர் கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நகைக்கடன் முறைகேடு தொடர்பாக மனவருத்தத்தில் இருந்த நீலகண்டன் விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவரது சாவுக்கு வேறேதும் காரணம் உள்ளதா? என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடன் வழங்கப்பட்டதில் முறைகேடு தொடர்பாக சென்னையில் பதிவாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. 
இதற்கிடையில் நேற்று அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கீரனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சக ஊழியர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். இறந்த நீலகண்டனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Next Story