கோயம்பேடு மார்க்கெட்டில் - லாரிகளுக்கு தனியாக நிலம் ஒதுக்கியும் தக்காளி விலை குறையவில்லை


கோயம்பேடு மார்க்கெட்டில் - லாரிகளுக்கு தனியாக நிலம் ஒதுக்கியும் தக்காளி விலை குறையவில்லை
x
தினத்தந்தி 16 Dec 2021 12:27 AM IST (Updated: 16 Dec 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட்டில் லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்கியும் தக்காளி விலை குறையவில்லையே? என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுப்பதாக கூறி கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் என்றும், இதனால் வெளிமாநிலத்தில் இருந்து தக்காளியை லாரிகளில் கொண்டு வந்து, விலையை குறைக்கலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டில், தக்காளி வியாபாரிகள் சார்பில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தக்காளி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில், தக்காளி லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துக்கும் உத்தரவிட்டார்.

வழங்கவில்லை

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சிவா, ஐகோர்ட்டு ஒரு ஏக்கர் நிலம் வழங்க மார்க்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டது. ஆனால், வெறும் 50 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்று கூறி அந்த நிலத்தின் வரைப்படத்தை தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்கெட் கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல் வேல்முருகன், ‘‘94 சென்ட நிலம் தக்காளி லாரிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. லாரிகளை நிறுத்தும் இடத்தில் தக்காளியை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

விலை குறையவில்லையே?

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, கடந்த 1-ந்தேதி முதல் வெளிமாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் தக்காளியை கொண்டுவர மாக்கெட்டில் நிலம் ஒதுக்கியும், தக்காளி விலை குறையவில்லையே?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘‘தென்மாவட்டங்களில் கனமழையினால் தக்காளி விளைச்சல் இல்லை. மராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைவாக உள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தக்காளி விலை குறைவு எதிர்பார்க்கப்பட்ட அளவு இல்லாவிட்டாலும், ஒரளவு குறைந்துள்ளது. மேலும், கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் வர உள்ளதால், தக்காளி லாரிகளை நிறுத்த நிலம் ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மேலும் நீட்டிக்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.


Next Story