சென்னை போர் நினைவுச்சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி


சென்னை போர் நினைவுச்சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
x
தினத்தந்தி 16 Dec 2021 3:39 AM IST (Updated: 16 Dec 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், சென்னை போர் நினைவுச்சின்னம் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும் என்று ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கூறினார்.

சென்னை,

சென்னையில் நிருபர்களுக்கு தக்‌ஷின் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியா மாபெரும் வெற்றியை பெற்றது. 16.12.1971 பிற்பகல் 4.21 மணிக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

அதே நாளில் போரில் பங்கேற்ற ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 93 ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். அதைத்தொடர்ந்து டிசம்பர் 16-ந் தேதியை ‘விஜய் திவாஸ்’ என்று இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி (இன்று), அந்த வெற்றியின் பொன்விழாவாகும். வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா கொண்டாடப்படுகிறது.

பொதுமக்கள் பார்வையிட திறப்பு

இந்தியா பங்கேற்ற பல்வேறு போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னம், இந்த பொன்விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 19-ந்தேதி மாலை 5 மணி வரை, 4 நாட்களுக்கு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படும்.

இன்று காலை சென்னையில் உள்ள முப்படைகளின் தலைமை அதிகாரிகளும் போர் நினைவுச் சின்னத்திற்கு வந்து மலர் வளையம் வைப்பார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்து வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அந்த போரில் பங்கேற்ற சிலர் மற்றும் குடும்பத்தினரும் போர் நினைவுச்சின்னத்திற்கு வருகை தருகின்றனர். அவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள்.

போரின் முடிவில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பலகையாக அங்கு வைக்கப்பட உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் சரண் அடைந்த படமும் வைக்கப்பட்டு இருக்கும். அதனுடன் மக்கள் ‘செல்பி’ எடுத்துக்கொள்ளலாம்.

அங்கு மெழுகுவர்த்தி, உதிரிப்பூக்கள் வைக்கப்பட்டு இருக்கும். அதை மக்கள் பயன்படுத்தி அஞ்சலி செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story