முந்திரி லாரியை கடத்திய வழக்கு: முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
முந்திரி லாரியை கடத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில், லாரி ஒன்றில் ரூ1.10 கோடி மதிப்பிலான 12 டன் எடை கொண்ட முந்திரி லோடு ஏற்றி கொண்டு ஜப்பான் நாட்டிற்கு செல்வதற்காக, தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், லாரி டிரைவரை , மிரட்டி லாரியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், லாரியை போலீசார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதனை தெரிந்து கொண்ட அந்தக் கும்பல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர். பின்னர் லாரியை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடத்தல் தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் உள்ளிட்ட 7 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தல் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார். மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் ஞானராஜ் ஜெபசிங் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மேற்படி ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story