12 மீட்டர் வரை உள்ளே சென்றது: சென்னையில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு


12 மீட்டர் வரை உள்ளே சென்றது: சென்னையில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 11:20 PM GMT (Updated: 16 Dec 2021 11:20 PM GMT)

சென்னையில் கடல் திடீரென்று உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 12 மீட்டர் வரை உள்ளே சென்றதாக கூறப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

சென்னை,

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடல் உள்வாங்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து தான் வருகிறது. இதுபோல் கடல் உள்வாங்கும் போது சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஏராளமானவர்களை பலி வாங்கியது. வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையாக அது தற்போதும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், காசிமேடு கடல் பகுதிகளில் கடல் நீர் திடீரென்று உள்வாங்கியதாக கூறப்படுகிறது. சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரம் அளவுக்கு கடல் உள்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலையில் கடற்கரையோரம் நடைபயிற்சி சென்றவர்கள் இதை பார்த்து அச்சம் அடைந்ததாகவும் பலர் கூறுகின்றனர். சமூக வலைதளங்களில் சுனாமி எச்சரிக்கையாக இருக்குமோ? என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.

இயல்பு நிலைக்கு திரும்பியது

கடந்த 3 தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை அங்கு விடுக்கப்பட்டது. அந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடல் உள்வாங்கிய நிகழ்வு, சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் சென்னை வாசிகளை சற்று கலக்கம் அடைய செய்தது. ஆனால் இந்த நிகழ்வு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் நீடித்ததாகவும், அதன் பின்னர் கடல் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதற்கேற்றாற்போல், நேற்று மேற்சொன்ன கடல்பகுதிகளில் எப்போதும் போலவே கடல் அலை கரைப்பகுதிகளில் மோதி மணற்பரப்பை நனைத்து கொண்டிருந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களிடம் கேட்டபோது, ‘சுனாமி எச்சரிக்கைக்கு மட்டும் கடல் உள்வாங்குவது இல்லை. கடலில் காற்றின் வேகம் குறையும் போது கூட கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் (‘எக்மன் டிரிப்ட்') பலநேரங்களில் நடக்கும். எனவே அதன் காரணமாகவும் உள்வாங்கி இருக்கலாம்' என்றனர்.

Next Story