ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு எதிரொலி தமிழ்நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு


ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு எதிரொலி தமிழ்நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 18 Dec 2021 4:39 AM IST (Updated: 18 Dec 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரசால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

புதிய கட்டுப்பாடுகள்

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.

இதுவரை பன்னாட்டு விமான நிலையங்களுக்குமட்டும் கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. இனி உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலம் வாரியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இ-பதிவு கட்டாயம்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை.

இ-பதிவு கட்டாயம்

கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணி கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லா சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும்.

பிற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகள் இ-பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தொற்று இல்லா சான்றிதழ்

கோவை விமான நிலையத்துக்கு வரும் இதர மாநில பயணிகள், கொரோனா தொற்று இல்லா சான்றிதழ் வைத்திருப்பது அவசியமாகும்.

பன்னாட்டு பயணிகளை பொறுத்தவரை மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதேபோல ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான மேலும் விவரங்களை இந்திய விமான நிலைய ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி சேவை

இந்த நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் மேம்படுத்தும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகைக்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 11 லட்சம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த குறுஞ்செய்தி சேவைகள் மூலம் பயன்பெற இருக்கின்றனர். தமிழகத்தில் 12 வகையிலான நோய்களுக்கு 11 வகையிலான தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த குறுஞ்செய்தி சேவையானது கிட்டத்தட்ட 20 லட்சம் பேருக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும்.

70 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இதுவரை அதிக ஆபத்தான நாடுகளில் இருந்து வந்த 12 ஆயிரத்து 767 பேருக்கும், குறைந்த ஆபத்தான நாடுகளில் இருந்து வந்த 73 ஆயிரத்து 795 பேரில்உத்தேச அடிப்படையில் 2 ஆயிரத்து 101 பேருக்கும் என மொத்தமாக 14 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என முடிவு வந்ததால், அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 65 பேருக்குபல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை மரபணு பகுப்பாய்வு மையத்தில் இருந்து 10 பேரின் முடிவுகள் வந்துள்ளது. அதில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. 8 பேருக்கு ‘டெல்டா’ வகை கொரோனா என்று தெரியவந்துள்ளது. இன்னொருவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளதால், மீண்டும் அவரது மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

7 நாட்கள் தனிமை

மேலும், மீதமுள்ள 55 பேரில் 28 பேருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது ஒமைக்ரான் தொடக்க நிலை அறிகுறி. இவர்களது பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும். தற்போது குறைந்த ஆபத்து உள்ள நைஜீரியா, காங்கோ நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

எனவே இனி எல்லா வெளிநாடுகளில் இருந்தும் விமானம் மூலம் வருபவர்களுக்கு தொற்று இல்லை என்றாலும், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி, 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதில் தொற்று இல்லை என்றால் மட்டுமே அவர்களை வெளிநடமாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற அனுமதியை மத்திய அரசு தர வேண்டும் என்ற கோரிக்கையை கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளோம். இதேபோல் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

278 பேருக்கு பரிசோதனை

உலகளவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளிலும், இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. இதுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்கள் 278 பேரை பரிசோதனை செய்துள்ளோம். தமிழகத்தில் தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் டாக்டர் குருநாதன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story