காஞ்சிபுரம் அருகே 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
தனியார் நிறுவன விடுதியில் தரமற்ற உணவு வினியோகிப்பதாக சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. அவர்களின் நிலை என்று தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை என்ன ஆனது என்று தெரியாத காரணத்தால் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்தப் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் ஆட்சியர் ஆர்த்தி, “2 பெண்கள் (கஸ்தூரி, ஐஷ்வர்யா) இறந்ததாக வெளியான தகவல் வதந்தி. 2 பெண் தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையிலுள்ள வீடியோ தவறாக பரப்பப்படுகிறது.
பிற ஊழியர்கள் அனைவரும்கூட நலமாக உள்ளனர். டீஹைட்ரேஷன் ஆகி அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டிருந்திருக்கிறது. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களும் நலமாகவே உள்ளனர். பாதிக்கப்பட்ட 115 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
விடுதிகளில் இனி இப்படி நடக்காமல் இருக்க, தனியொரு கமிட்டி விரைவில் அமைக்கப்படும். தற்போது இவ்விவகாரத்தில் தரமற்ற உணவு வழங்கிய விடுதி வார்டன் மிது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், போராட்டாக்காரர்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 2 பெண்களிடமும் வீடியோ காலில் பேசி அதனை போராட்டத்திலுள்ள தொழிலாளர்களிடம் காண்பித்தார் ஆட்சியர். இதையடுத்து, சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Related Tags :
Next Story