நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி


நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 18 Dec 2021 2:48 PM IST (Updated: 18 Dec 2021 2:48 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை பள்ளி விபத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை,

நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெறும் மாணவர்களை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பார்த்து ஆறுதல் கூறினார்கள். பின்னர் தமிழக அரசு காயம் அடைந்தவர்களுக்கு அறிவித்த ரூ.3 லட்சம் நிதியை பெற்றோரிடம் வழங்கினார்கள். 

இதற்கிடையே, பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

பள்ளி விபத்து தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில்  அடைக்க நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வி உடல்நலக்குறைவால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் சென்ற நெல்லை மாவட்ட நீதித்துறை நீதிபதி ஜெயகணேஷ் அவரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, தலைமை ஆசிரியை ஞானசெல்விக்கு 31-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story