நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவேண்டும்: மு.க.ஸ்டாலின்
விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை மாவட்ட அளவிலேயே முடித்துக்கொள்ளுமாறும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி மற்றும் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1989-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் “தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். அப்போது அவர், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்து மாவட்ட அளவிலேயே பேசி கூட்டணி கட்சியினரும் திருப்திபடும் வகையில் முடிவெடுத்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதை போல வர உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை பெற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை குறிக்கோளாக கொண்டு கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
நான் செல்லும் கூட்டங்களுக்கு தற்போது, இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர். அவர்கள் அனைவரையும் நமது கட்சியில் புதிய உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு குறைந்தது 25 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். மேலும் பூத் கமிட்டிகளையும் அமைக்க வேண்டும்” என்று பேசியதாக கூறப்படுகிறது.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரே தீர்மானம் வருமாறு:-
“முதலில் நான் மனிதன். இரண்டாவது நான் அன்பழகன். மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன். நான்காவது நான் அண்ணாவின் தம்பி. ஐந்தாவது கலைஞரின் தோழன்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டவர் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சுமார் 50 ஆண்டுகாலம் செயலாற்றிய பேராசிரியர் க.அன்பழகன் ஆவார். அவரது நூற்றாண்டு 19-ந் தேதி (இன்று) தொடங்குகிறது.
ஓராண்டு முழுவதும் கொண்டாட்டம்
இந்த நிலையில், பேராசிரியரின் நூற்றாண்டு தொடங்குவது நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு. எனவே, அவரது நூற்றாண்டினை தி.மு.க. சார்பில் ஒவ்வொரு மாவட்ட அமைப்பு சார்பிலும் ஓராண்டு முழுவதும் தொடர்ச்சியாக கொண்டாடுவதுடன், நலத்திட்ட உதவிகளை வழங்கியும், படிப்பகங்கள்-நூலகங்களைத் திறந்தும், இளைய தலைமுறையினருக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தியும் பேராசிரியரின் புகழ் ஒளி பரவிடச் செய்திடுவோம்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story