பேராசிரியர் அன்பழகனின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி நந்தனத்தில் அவரின் சிலையை இன்று மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, வளாகத்திற்கு க.அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டுகிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
க.அன்பழகன்
‘இனமான பேராசிரியர்’ என்று கருணாநிதியால் பெருமிதத்தோடும், பேரறிஞர் அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்து போற்றப்பட்டவர் க.அன்பழகன். படிக்கின்ற காலக்கட்டத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளாலும், அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றாலின்பாலும் ஈர்க்கப்பட்டு, பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 1922-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி கல்யாண சுந்தரனார்-சொர்ணாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். பள்ளி பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தணியாத தாகம் கொண்டிருந்த காரணத்தினால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலை படிப்பை முடித்தார். அண்ணாவின் அன்பு வேண்டுகோளை ஏற்று 1944 முதல் 1957-ம் ஆண்டு வரையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில்தான் க.அன்பழகனுக்கும், கருணாநிதிக்கும் இடையே முதல் அறிமுகம் ஏற்பட்டது. அன்று தொடங்கிய அந்த நட்பு 75 ஆண்டு காலம் இணைபிரியாத உயரிய நட்புக்கு இலக்கணமாகும். ‘நாங்கள் இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்’ என்று மகிழ்ச்சி பொங்கிட குறிப்பிட்டு மகிழ்ந்தவர் கருணாநிதி.
தமிழ்மொழியின் மீது பேராசிரியர் கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரணமாக, க.ராமையா என்கின்ற தனது பெயரை க.அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார். க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளின் தொடக்க நாளான நாளை (இன்று) அன்னாரின் அருமைப் பெருமைகளை போற்றிப் பாராட்டுகின்ற வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்பழகனின் சிலையினை திறந்து வைக்கிறார்.
பெயர் சூட்டல்
இதற்கான நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நடக்கிறது. ஏறத்தாழ 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறுசேமிப்பு துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டியும், நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அவரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினையும் குடும்பத்தாருக்கு வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களுக்கு கடிதம்
மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், க.அன்பழகனின் நூற்றாண்டினை தி.மு.க. தலைமை முதல் ஒவ்வொரு கிளை வரையிலும் கொண்டாடுவோம். அவர் ஊட்டிய இயக்க உணர்வை நிலைநாட்டிடுவோம். கொள்கைச் சூரியனாய் எந்நாளும் ஒளிவீசும் அன்பழகனின் புகழை முரசொலிப்போம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story