மாநகர பஸ் கண்டக்டரை கல்வீசி தாக்கிய பள்ளி மாணவர்கள்; பஸ்களை இயக்க மறுத்து டிரைவர்கள் போராட்டம்
படிக்கட்டில் தொங்கியபடி வந்ததை கண்டித்த மாநகர பஸ் கண்டக்டரை கல்வீசி தாக்கிய பள்ளி மாணவர்களை கண்டித்து சக டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படிக்கட்டில் தொங்கியபடி பயணம்
சென்னையில் ஓடும் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டு மற்றும் ஜன்னல்களை பிடித்து தொங்கியபடியும், பஸ் கூரை மேல் ஏறியும் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதுடன், சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதனை கண்டிக்கும் டிரைவர், கண்டக்டர்களுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் பஸ்சில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு நேற்று மாலை 3 மணியளவில் மாநகர பஸ் (தடம் எண் 29A) வந்து கொண்டிருந்தது. புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் அந்த பஸ்சில் ஏறினர். அந்த மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சாலையில் கால்களை உரசியபடியும், பஸ்சின் மேற்கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்தனர்.
கண்டக்டர் மீது கல்வீச்சு
பஸ் கண்டக்டர் கார்த்திக், படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்கள் மற்றும் மேற்கூரையில் நின்றிருந்த மாணவர்களை கண்டித்து, உள்ளே வரும்படி கூறினார். ஆனாலும் மாணவர்கள், அதை கேட்காமல் தொடர்ந்து ஆபத்தான முறையிலும், சக பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் பயணம் செய்ததுடன், பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டரையும் கிண்டல் செய்தபடி வந்தனர்.
ஒருகட்டத்தில் மாணவர்களின் செயல் அத்துமீறவே, அவர்களை கண்டக்டர் எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள், பஸ் ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையில் சென்றபோது கீழே கிடந்த கற்களை எடுத்து கண்டக்டர் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் கண்டக்டர் கார்த்திக் மற்றும் பெண் பயணி ஒருவர் காயம் அடைந்தனர்.
கல்வீசிய மாணவர்களை சகபயணிகள் உதவியுடன் கண்டக்டர் கார்த்திக் மடக்கி பிடித்தார். பிடிபட்ட மாணவர்களை, சக மாணவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக மீட்டுச் சென்றுவிட்டனர்.
போராட்டம்
அப்போது அந்த வழியாக வந்த மற்ற மாநகர பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், கண்டக்டர் கார்த்திக் மீது கல்வீசி தாக்கிய பள்ளி மாணவர்களை கண்டித்து பஸ்களை இயக்க மறுத்து, சாலையின் இருபுறமும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஓட்டேரி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர், கண்டக்டர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால் கண்டக்டரை கல்வீசி தாக்கிய பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வரையில் பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் அழகேசன், தமிழ்வாணன், செம்பேடு பாபு ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர், கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட டிரைவர், கண்டக்டர்கள் பின்னர் பஸ்களை இயக்க தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story