வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: மேலும் 9 பேரிடம் விசாரணை..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Dec 2021 1:54 PM IST (Updated: 19 Dec 2021 1:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 9 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலூர்,

வேலூர்-காட்பாடி செல்லும் சாலையில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே பிரபலமான நகைக்கடை உள்ளது.  கடந்த 15 ஆம் தேதி இந்த கடையின் பின்புறத்தில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 15 கிலோ தங்க நகைகள், அரை கிலோ வைரநகைகள் கொள்ளைபோனது. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடையில் வேலைபார்க்கும் ஊழியர்கள், பாதுகாவலர்கள், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.  கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த ஒரு நபர் நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து  தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்போது நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 9 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிடிபட்ட 9 பேருக்கும் வேறு ஏதும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story