தமிழக மீனவர்கள் 55 பேர் கைது; எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
ராமேசுவரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு நேற்று மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ். லியோ ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.
இவர்களை தொடர்ந்து மேலும் 12 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இன்று சிறைபிடித்தனர். இதுவரை 8 விசைப்படகுகள், 55 மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைதான மீனவர்களில் 43 பேர் இன்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் டிசம்பர் 31ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை கண்டிக்கிறேன். மத்திய அரசு உடனடியாக சிறைப்பிடிக்கப்பட்ட 55 மீனவர்களையும் மீட்டுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story