அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபர் மீது தாக்குதல்
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபரை புதுக்கோட்டைக்கு வரவழைத்து இளைஞர்கள் தாக்கினார்கள். இதையடுத்து, அவரை கீரமங்கலம் போலீசார் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
கீரமங்கலம்,
வேலை வாங்கித்தருவதாக மோசடி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாக சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 36) என்பவர் கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய இளைஞர்கள் சிலர் ரூ.20 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித்தரவில்லை.
சரமாரி தாக்குதல்
இதனால் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் மேலும் சிலருக்கு அரசு வேலை வாங்கித்தர வேண்டும். அதற்கு பணம் தருவதாக கூறி பெருமாளை புதுக்கோட்டைக்கு வர வழைத்தனர். பின்னர் அவரை கீரமங்கலத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான கொட்டகையில் சில நாட்கள் தங்க வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீஸ்காரருக்கு தொடர்பு
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் எத்தனை பேரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தனர் என்பது குறித்தும், சென்னை வாலிபரை தாக்கிய இளைஞர்கள் குறித்தும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story