நண்பர்கள் கிண்டல் செய்ததால் - செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்


நண்பர்கள் கிண்டல் செய்ததால் - செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
x
தினத்தந்தி 19 Dec 2021 7:07 PM GMT (Updated: 19 Dec 2021 7:07 PM GMT)

நண்பர்கள் கிண்டல் செய்ததால் - செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர், சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 34). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி, குடும்பத் தகராறு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு மணிமாறன், மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் எண்ணூர் நேதாஜி நகரில் உள்ள நண்பர்களை பார்க்கச்சென்ற மணிமாறனை, அவரது நண்பர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன், நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி, தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிமாறனிடம் கீழே இறங்கி வரும்படி கூறினர். மணிமாறனிடம் எவ்வளவோ பேசியும் அவர் கீழே இறங்க மறுத்து விட்டார்.

இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள், செல்போன் ேகாபுரத்தில் ஏறி சாமர்த்தியமாக பேசி மணிமாறனை கீழே இறக்கி கொண்டு வந்தனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மணிமாறனை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story