ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக்கைத்தல சேவை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக்கைத்தல சேவை
x
தினத்தந்தி 20 Dec 2021 2:55 AM IST (Updated: 20 Dec 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக் கைத்தல சேவையும், நாளை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 13-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்றையதினம் நம்பெருமாள் ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டுவார்கள். அர்ச்சகர்களின் கைகளில் இருந்து நம்பெருமாள் சேவை சாதிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.

இதனையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடப்பார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைவார். அங்கு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெறும். மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெறும். இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story