அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட ‘அம்மா வளாகம்’ பெயரை மாற்றவில்லை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட ‘அம்மா வளாகம்’ பெயரை மாற்றவில்லை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
x
தினத்தந்தி 20 Dec 2021 3:46 AM IST (Updated: 20 Dec 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டிடத்துக்கு தான் ‘பேராசிரியர் அன்பழகன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட அம்மா வளாகம் பெயரை மாற்றவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக்கட்டிடத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டியதை ஏற்றுக்கொள்ள இயலாத “கல் மனம்” படைத்தவர்களாக அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் மாறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது.

மக்களுக்கு தெரியும்

பேராசிரியர் பெயரில் அந்த மாளிகைக்கு பெயர் சூட்டப்பட்டதில் உள்ள உண்மை தகவல்களை கூட அறியாமல் அதுவும் நிதியமைச்சராக இருந்த ஒருவரும், முதல்-அமைச்சராக இருந்த இன்னொருவரும் அறிக்கை விட்டிருப்பதால் உண்மையை விளக்க, அவர்களுக்கு ஒரு விளக்கத்தை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சென்னை நந்தனத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் கட்டிடங்கள் அமைந்துள்ள ‘அம்மா வளாகத்தில்' உள்ள ஒரு கட்டிடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்திற்குத்தான் “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க.ஆட்சியின்போது பெயரிடப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரையோ, அதற்குரிய அரசாணையையோ மாற்றவில்லை, அரசியல் காழ்ப்புணர்ச்சிகொண்டு அ.தி.மு.க. ஆட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும், கருணாநிதி கட்டிய புதிய சட்டமன்றத்தையும் சிதைத்ததுபோல் நாங்கள் செய்துவிடவில்லை. அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பின், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு முந்தைய அரசின் திட்டங்களையோ, பெயர்களையோ மாற்றவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

வெட்கக்கேடு

தி.மு.க. ஆட்சியில் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு ‘கலைஞர் மாளிகை’ என பெயரிடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் காழ்ப்புணர்ச்சியோடு கருணாநிதியின் பெயரை அ.தி.மு.க. ஆட்சி அடியோடு அகற்றிவிட்டதை வசதியாக மறந்துவிட்டு இன்றைக்கு நடைபெறாத ஒன்றிற்காக அறிக்கைவிட்டு இருப்பது வெட்கக்கேடாகும்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள கல்வித்துறை வளாகமான டி.பி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள ஒருகட்டிடத்திற்கு ஈ.வி.கே. சம்பத் மாளிகை எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிடவளாகத்தில் அமைந்துள்ள ஒருகட்டிடத்திற்கு அம்மா மாளிகை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக்கூட ஆட்சியில் இருந்த அவர்கள் உணரத் தயாராக இல்லை. அந்த அளவிற்கு திராவிட இயக்க வெறுப்பு அவர்கள் உடம்பெல்லாம் கடந்த 4 வருடங்களில் ஊறிப்போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story