‘அம்மா வளாகம்' என்ற பெயரை மாற்றம் செய்வதா? ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கண்டனம்


‘அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றம் செய்வதா? ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 20 Dec 2021 5:30 AM IST (Updated: 20 Dec 2021 5:30 AM IST)
t-max-icont-min-icon

‘அம்மா வளாகம்' என்ற பெயரை மாற்றுவதா? என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்து, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச்சென்றதோடு, தன் வாழ்க்கையை தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தமிழக அரசியல் வரலாற்றில் தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஜெயலலிதாவை கவுரவிக்கும் விதத்தில், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள நிதித்துறை வளாகத்துக்கு ‘அம்மா வளாகம்' என்று அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.

‘அம்மா வளாகம்' என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித்துறை வளாகத்தில் தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைப்பதாகவும், அந்த வளாகத்துக்கு ஏற்கனவே உள்ள ‘அம்மா வளாகம்' என்ற பெயரை நீக்கிவிட்டு, ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என்று பெயர் சூட்ட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அநாகரிகத்தின் உச்சம்

பேராசிரியர் க.அன்பழகன் நிதித்துறை உள்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில் ‘அம்மா வளாகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என்று வைப்பது நாகரிகமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல் ஆகும்.

இதுபோன்ற செயல் தமிழ் பண்பாட்டுக்கு, தமிழ் கலாசாரத்துக்கு எதிரான செயல். ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்தது மட்டுமல்லாமல், ஒரு தேசிய தலைவராக அனைவராலும் கருதப்பட்டார். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். வட இந்திய மாநிலத்துக்கு சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட ஒரே தமிழின தலைவர் ஜெயலலிதா தான். இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம்.

கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம். இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே ‘அம்மா வளாகம்' என்ற பெயரை மாற்றி ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என்று வைப்பதை முதல்-அமைச்சர் உடனடியாக கைவிடவேண்டும். புதியதாக வேறு மாளிகை தமிழக அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரை சூட்டலாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story