பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு: சென்னை நிதித்துறை கட்டிடத்துக்கு க.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டது


பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு: சென்னை நிதித்துறை கட்டிடத்துக்கு க.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டது
x
தினத்தந்தி 20 Dec 2021 5:36 AM IST (Updated: 20 Dec 2021 5:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்துக்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறைக்கு சொந்தமான கட்டிடம் முன்னாள் நிதி அமைச்சரும், தி.மு.க.வின் வழிகாட்டியுமான பேராசிரியர் க.அன்பழகனின் பெயரால் அழைக்கப்படும் என்ற அறிவிப்பை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வெளியிட்டு இருந்தார்.

அதன்படி, பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்துக்கு அவரது பெயரை சூட்டி திறந்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இதில் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு உள்பட அமைச்சர்களும், பேராசிரியர் க.அன்பழகனின் மகன் அ.அன்புசெல்வன், பேரன் வெற்றியழகன் எம்.எல்.ஏ. உள்பட குடும்பத்தினர்கள், கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட எம்.பி.க்களும், உதயநிதி ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நூல்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. அதன்பின்னர், ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்துக்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அந்த கட்டிடத்தின் நுழைவுவாயில் பகுதியில் பேராசிரியர் க.அன்பழகனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையையும் அவர் திறந்து வைத்ததோடு, அமைச்சர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பினனர் பேராசிரியர் க.அன்பழகன் மகன், பேரன் மற்றும் குடும்பத்தினர்களை வரவழைத்து அவர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் க.அன்பழகனின் 42 நூல்களை நாட்டுடைமையாக்கியதோடு, அதற்கான அரசின் நூல் உரிமைத் தொகையான ரூ.25 லட்சத்துக்கான காசோலையை, அவரின் மகன் அன்புசெல்வன் மற்றும் பேரன் வெற்றியழகன் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன் பின்னர், பேராசிரியர் க.அன்பழகனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூற்றாண்டு சிறப்பு காணொலி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பிறந்தது முதல் படிப்பு, தமிழுக்கு ஆற்றிய தொண்டு, கருணாநிதியுடன் அவருடைய பயணம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவருடைய பங்கு, அமைச்சராக இருந்து செய்த பணிகள் உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதனை மு.க.ஸ்டாலின் பார்த்தார்.

நெகிழ்ச்சியான தருணம்

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றியுரை கூறினார்.

இதுகுறித்து பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன் எம்.எல்.ஏ. கூறும்போது, ‘இந்த நிகழ்ச்சி மூலம் பேரனாகவும், தொண்டனாகவும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த முயற்சிக்கு குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன். இது நெகிழ்ச்சியான தருணம்' என்றார்.

அன்பழகன் வீட்டுக்கு சென்றார்

மறைந்த க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். சிறிது நேரம் அன்பழகன் குடும்பத்தாருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் சென்றிருந்தார்.

Next Story