கோவில்களில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் பரவசம்..!!
தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.
சிதம்பரம்,
மார்கழி மாதம் வரும் திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜைசெய்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நேற்று தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜ பெருமானே நேரடியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வேறு எந்த கோவில்களிலும் காணக்கிடைக்காத அரிய நிகழ்வாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டத்தை நேற்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவில் தேரோட்டம் நடத்தவும், ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தநிலையில் தேரோட்டம் நடத்தவும், ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நேற்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், சிறப்பு அலங்காரங்கள் செய்து, பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் காலை 7 மணி அளவில் கீழ வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு 4 வீதிகளிலும் பெண்கள் கோலமிட்டு தேர்களை வரவேற்றனர். சிவனடியார்கள் மேளதாளங்கள் முழங்கவும், பல்வேறு இசை வாத்திய கருவிகளை இசைத்தபடியும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
தேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் இறக்கப்பட்டு, கோவிலுக்குள் ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு இரவு 8.30 மணி முதல் விடிய, விடிய லட்சார்ச்சனை நடந்தது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகிறது. இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகழித்து வருகின்றனர். இதையொட்டி அதிகாலை 2 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலா வந்த பிறகு, மாலை 3 மணி அளவில் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.
அதாவது ஆயிரங்கால் மண்டபம் முன்பு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்கள். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story