ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கு: விசாரணையை தீவிரப்படுத்தியது தனிப்படை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Dec 2021 11:37 AM IST (Updated: 20 Dec 2021 11:37 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை தனிப்படை தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னை, 

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் விருதுநகரில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசி முடித்தவுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை திருத்தங்கல் போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணைக்காக அழைத்து வந்தனர். 

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் அவர்களிடமிருந்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் நேற்று விசாரணையை முடித்து அவர்கள் 3 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில் அவர்கள் 3 பேரையும் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றபோது அ.தி.மு.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திரபாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் அவரது இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை தனிப்படை தீவிரப்படுத்தி உள்ளது. இதன்படி மதுரையில் ஆவின் முன்னாள் மேலாளரிடம்  தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இதற்காக கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் வெளி மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் இருக்கலாம் என்று உறுதி செய்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story