சென்னை மாணவி தற்கொலை; கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3 வரை சிறை தண்டனை


சென்னை மாணவி தற்கொலை; கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3 வரை சிறை தண்டனை
x
தினத்தந்தி 20 Dec 2021 11:22 AM GMT (Updated: 2021-12-20T16:52:24+05:30)

சென்னை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ந்தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.சென்னை,

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன் மதியம் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் மாணவி எழுதிய உருக்கமான 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின. அதில் 2 கடிதங்களில் அவர், “ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி குறிப்பிட்ட ஆசிரியையின் மகன் யார்? என விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  மாணவியின் செல்போன், கடிதம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவருக்கு வருகிற ஜனவரி 3ந்தேதி வரை சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இதனையடுத்து அவர், சிறையிலடைக்க கொண்டு செல்லப்பட்டார்.


Next Story