தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை; மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
ராமேசுவரம் மீனவர்கள் 43 பேர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்களை சிறை பிடித்து சென்றது. மேலும் அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனால் சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காலை ராமேசுவரம் கரை திரும்பியதும் இதுபற்றி தெரிவித்தனர்.
இதனால் மீனவ கிராமங்களில் பதற்றம் உருவானது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். பின்னர் அங்கு படகுகளை நிறுத்தி விட்டு மீனவர்களை மட்டும் தலைமன்னார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 43 பேர் சிறை பிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 1,800 பேர் வரை 200 விசைப்படகுகளை கரையில் நிறுத்தி விட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 12 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதி மீனவர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 400 விசை படகுகளை சேர்ந்த ஆயிரம் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனை, மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் தி.மு.க. எம்.பி.க்கள் இன்று வழங்கியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ராமேசுவரம் மீனவர்கள் 43 பேர், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேர் உள்ளிட்ட இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story