வயதான தம்பதி கொலையில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


வயதான தம்பதி கொலையில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 9:41 PM IST (Updated: 21 Dec 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

வயதான தம்பதியை கொலை செய்து வெளிநாட்டு கரன்சி, நகைகளை கொள்ளையடித்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி
வயதான தம்பதியை கொலை செய்து வெளிநாட்டு கரன்சி, நகைகளை கொள்ளையடித்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அமைச்சரின் உறவினர்

புதுச்சேரி அண்ணா நகர் 14-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65). இவர்கள்  வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்மந்தி ஆவர்.
பாலகிருஷ்ணனின் 2 மகன்களும், ஒரு மகளும் பிரான்ஸ் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன், ஹேமலதா தம்பதி மட்டும் அண்ணா நகர் வீட்டில் தனியாக வசித்தனர்.
கடந்த 21.11.2018-ந் தேதி படுக்கை அறையில் தம்பதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். வீட்டில் பீரோக்கள் திறக்கப்பட்டு, நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

டிரைவர் உள்பட 2 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டில் டிரைவர் ஒருவரின் அடையாள அட்டை கிடந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முகமது காசிம் (31), அவரது நண்பர் முகமது இலியாஸ் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பாலகிருஷ்ணன் வீட்டில் முகமது காசிம் மாற்று டிரைவராக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.

இரட்டை ஆயுள்

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலகிருஷ்ணன் அதிகளவில் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததை பார்த்துள்ளார். அதை கொள்ளையடிக்கும் நோக்கில் தனது நண்பர் முகமது இலியாசுடன் சேர்ந்து தம்பதியை முகமதுகாசிம் கொலை செய்துள்ளார்.
வீட்டில் அதிக அளவில் பணம் இல்லாததால் ஹேமலதா கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகைகள் மற்றும் சிங்கப்பூர் கரன்சிகளை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.
இந்த கொலை வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்து  இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முகமது காசிம், முகமது இலியாஸ் ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். 
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.

சிறையில் இருந்தபடியே தீர்ப்பு

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது காசிம், முகமது இலியாஸ் ஆகிய 2 பேருக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. தொடர்ந்து காலாப்பட்டு சிறையில் அவர்கள் இருந்து வந்தநிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 வழக்கிற்காக புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 2 பேரும் தீர்ப்பிற்கு பிறகு மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story