‘தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெறுவார்’ அமைச்சர் சேகர்பாபு பேட்டி


‘தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெறுவார்’ அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2021 11:56 PM IST (Updated: 21 Dec 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெறுவார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராய சமூக பொருளாதார கரிசனை வாரியம் சார்பில், சென்னை சூளையில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டியதுடன், தெருவோர மற்றும் குடிசை வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் செயலாளர் பாதிரியார் டேனியல் டைட்டஸ், சமூக பொருளாதார கரிசனை வாரியத்தின் இயக்குனர் சாம்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின்

விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவியோ அல்லது அமைச்சர் பதவியோ வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சர்களும் முன்னிறுத்தி வருகிறார்கள். உங்களின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

உண்மையாக, இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு இன்றி உழைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடித்து நிற்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, சட்டமன்ற தேர்தல் என்றாலும் சரி, இடைத்தேர்தல் என்றாலும் சரி, கட்சியின் சுக துக்க நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, மக்களுக்கு உதவி புரியும் நிகழ்ச்சி என்றாலும் சரி, கட்சி தொண்டர்களுக்கு இன்னல் என்கிற போது உதவி புரியும் நிகழ்ச்சி என்றாலும் சரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை போலவே உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

எனவே, நிச்சயம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு உண்டான அங்கீகாரத்தை வழங்குவார். மக்கள் பணி மேலும் சிறப்படைய உதயநிதி ஸ்டாலினும் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story